அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 27. தவம்

அஃதாவது , உடம்பு கொழுத்தால் மனம் ஐம்புல வின்பத்தையே நாடுமாதலாலும் , மத யானை போல் அடங்கா தாதலாலும் , அதையடக்கி இறைவன்மேற் செலுத்துவதற்குத் தோதாக உண்ணா நோன்பாலும் தட்ப வெப்பம் பொறுத்தல் முதலிய கடும் பயிற்சிகளாலும் உடம்பை வாட்டுதல். உடம்பை யொடுக்கி யடக்குவதில் புலான்மறுத்தல் மென்மையானதாகவும் தவம் வன்மையானதாகவு மிருத்தலால் , இஃது அதன் பின் வைக்கப்பட்டது.

தவம் என்ற சொற்கே எரித்தல் என்றுதான் பொருள். துலங்குதல்=விளங்குதல். துலங்கு - துளங்கு=திகழ். துள -தள. தளதளத்தல்=திகழ்தல். தள -தழல்-தணல். தழ-தக. தகதக வெனல்=ஒளி வீசுதல். தக -தகம் - தங்கம் -விளங்கும் பொன். தக - திக -திகழ் -திங்கள் =இரவில் ஒளி தரும் சுடர். தகம்=எரிவு சூடு. தகம் -தவம்==உடலை எரித்தல் போல் வருத்துந் துறவறப் பயிற்சி. க-வ, போலி: குழை-குகை. குவை-தக-தஹ் (வ.) தவம் -தபஸ்(வ.) தக -தகை=தாகம். தகம் -தாகம் = உடற்சூட்டால் உண்டாகும் நீர் வேட்கை. தக-தவ-தவி. தவித்தல்=நீர் வேட்கையுண்டாதல். தாகம் - தாஹ (வ.) தவி - தப் (வ.). தவம் -தவன் -தவத்தோன். இதற்கு ஒத்த வடிவம் சமற்கிருதத்தில் இல்லை. தபஸ்வின் என்ற வடிவந்தான் உண்டு.

தவம் இல்லறத்தார்க் குரியதும் துறவறத்தார்க் குரியதும் என இரு வகைப்படும். அவற்றுள் முன்னது எண்வகை யுறுப்புகளைக் கொண்டு தவம் அல்லது நோன்பு என்று பெயர் பெறுவது;பின்னது ஒகத்தின் (யோகத்தின்) எண்வகை யுறுப்புக்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுவது.

இல்லறத்தார் பிள்ளைப்பேறும் உடல்நலமுங் கருதி உண்டி சுருக்கி நாடு நகரங்களிலுள்ள கோவில்களில் வழிபடுவது நோன்பு என்றும், காட்டில் தங்கிக் கடுமையாக வாழ்ந்து சிறிது காலம் வழிபடுவது தவம் என்றும், சொல்லப்படும்.

கணவனும் மனைவியும் காட்டிலுள்ள முனிவரை யடுத்துத் தொண்டு செய்தபின், அவர் தந்த கனியை யுண்டு மனைவி கருவுற்றுப் பிள்ளை பெற்றதாகச் சொல்லப்படுவதெல்லாம் , கூடா வொழுக்கத்தினரான ஆரியர் செய்த சூழ்ச்சிகளே என அறிக.

மறுமையில் விண்ணுலக வின்பம் நுகரும் பொருட்டு இம்மையிற் காட்டில் வாழ்ந்து செய்யும் எண்வகை யுறுப்புத் தவம்,

நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடரோம்பி-யூரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி.

என்னும் புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுளால் (வாகை.14) அறியப்படும். இதையே "நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்" என்று தொல்காப்பியங் கூறும் (புறத் 20) இது பிறவிக்குட்படுவதால் துறவற மாகாது.

கணவனை யிழந்த கற்புடை மனைவியர் நோற்கும் கைம்மை நோன்பு இல்லறத்தின் பாற்படுவதே. இறைவனல்லாச் சிறு தெய்வங்களை நோக்கிச் செய்யும் தவம் பயனில் முயற்சியம். அத் தெய்வங்களை நோக்கித் தவஞ் செய்து பலர் பேறுகளைப் பெற்றதாகக் கூறும் கதைகளெல்லாங் கட்டுக்கதைகளே. இனி , ஊழினாலும் உழைப்பினாலுமே பெறக்கூடிய கல்வி அரசப் பதவி முதலிய பேறுகளையும் , பகைவரைக் கொல்லும் வலிமை, தெய்வத்தையுங் கொல்லுந்திறம் முதலிய ஈவுகளையும் , தவஞ் செய்து பெற்றதாகக் கூறுங் கதைகளும் நம்பத்தக்கன வல்ல.

துவறத்திற்குரிய தவம், படிப்படியாக வுண்டி சுருக்கிப் பின்பு காய்கனி கிழங்குகளையே வுண்டு இறுதியில் அவையுமின்றி உதிர்ந்த இலைகளையே உட்கொள்வதும், கடுங் கோடையில் நண்பகல் வெயிலிலும் கூதற் காலத்திலும் பனிக் காலத்திலும் குளிந்த நீர் நிலையிலும் நிற்றலும் , முதலில் மரவுரி அல்லது நீர்ச்சீலை யுடுத்து இறுதியில் அதுவுமின்றியிருப்பதும், உள்ளத் தூய்மையைப் பேணுவதும், ஓரறிவுயிர்க்குந்துன்பஞ் செய்யாமையும் , பிறவுமாம். இதனொடு சேர்ந்த ஏனையே ழுறுப்புக்களும் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்திற் கூறப்படும்.

நாற்றிசையும் மூட்டிய விறகுத் தீயும் தலைக்கு மேற்பட்ட வெயில் தீயுமாகிய ஐந்தீ நாப்பண் நிற்றல் , ஆரிய வழக்கமாகத் தோன்றுகின்றது.

 

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.

 

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும் , பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையுமாகிய அவ்வளவே; தவத்திற்கு உரு - தவத்தின் வடிவாம். இத்தவ விலக்கணம் தொகுத்துக் கூறல் என்னும் உத்தி பற்றியது. ஏகாரம் தேற்றம்.