வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.

 

வலி இல் நிலைமையான் வல் உருவம்-மனத்தை யடக்கும் வலிமையில்லாத இயல்பினன் வலிமை மிக்க துறவியரின் தவக் கோலத்தைப் பூண்டு கூடாவொழுக்கம் ஒழுகுதல்; பெற்றம் புலியின தோல் போர்த்து மேய்ந்த அற்று-ஆவு கொல்லைக் காவலர் துரத்தா வண்ணம் புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும்.

அதிகாரத்தாலும் உவமையாலும் கூடாவொழுக்கம் என்பது வருவித்துரைக்கப்பட்டது. ஆவையுடையார் அதற்குப் புலியின்தோலைப் போர்த்துப் பிறர் கொல்லையில் மேய விடுதலுங் கூடுமாதலின், இவ்வுவமை இல்பொருளுவமை யாகாது. புலி பசித்தாலும் புல் தின்னாது. என்னுங் கருத்தினாலும், புலியடிக்கு முன் கிலியடிக்கும். ஆதலாலும், புனங்காப்போர் புலியை அண்டுவதில்லை. அங்ஙனமே, தவத்தோர் தவறு செய்யார் என்னும் நம்பிக்கையினாலும், தவத் தோரை அணுகின் சாவித்து விடுவர் என்னும் அச்சத்தாலும், மக்கள் தவக்கோலத்தாரிடம் நெருங்குவதில்லை. புலித்தோற் போர்த்த பெற்றம் பிறர் புலங்களில் மறைவாக மேய்வது போல, கூடாவொழுக்கத்தானும் பிறர்க்குரிய பெண்டிரொடு கூடிக் களவாகவும் கள்ளத்தனமாகவும் இன்பம் நுகர்வான் என்பது பெறப்பட்டது.