சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும்.

 

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி- சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்- தன்னைச் சேர்ந்தவரை மட்டுமின்றி, அவருக்குத் துன்பக்காலத்தில் ஏமப் புணைபோல் உதவும் இனத்தாராகிய தன்னைச் சேராத வரையுஞ் சுடும்.

சேர்ந்தாரைக்கொல்லி என்னும் பெயரிலுள்ள பலர்பா லீறு ஏனை நான்கு பாலையுந் தழுவும். இத்துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில இருவகை யறத்திற்கும் பொதுவென்பது முன்னரே கூறப்பட்டது. அவற்றுள் வெகுளாமை என்பது ஒன்று. இருவகை யறத்தார்க்கும் இனமாக உள்ளவர் துன்பக் காலத்தில் உதவித் தூக்கியெடுத்தலால், அவரை ஏமப்புணையாக உருவகித்தார். ஏமப் புணையாவது, நடுக்கடலிற் கப்பல் மூழ்கும்போது கலவர் ஏறித்தப்பும் ஏமப் படகு. (life-boat) வாழ்க்கைக் கடலைக்கடக்கும் இல்லறத்தார்க்கு இடுக்கட் காலத்தில் உதவிக்காக்கும் இனத்தார் ஏமப்புணையார்; பிறவிக் கடலைக் கடக்கும் துறவு பயில்வார்க்குத் தவவோகங்களில் தவறு நேர்ந்து அவர் கெடும் நிலையில் அவரைத்திருத்தி ஆற்றுப்படுத்தும் முழுத்துறவியர் ஏமப்புணையார். 'சேர்ந்தாரைக்கொல்லி' தீக்கு ஒரு பெயர்.

சுடுதல் சேர்ந்தவரை வருத்துதலும் சேர்ந்தவரைச் சேர்ந்தாரைத் தாக்குதலும். கனல்தீ உடல் தொடர்பு கொண்டாரை மட்டும் வருத்த, சினத்தீ உடல் தொடர்பு கொண்டாரொடு உளத்தொடர்பு கொண்டாரையும் வருத்தும் என்பதாம். புணையையும் என்னும் எச்ச உம்மை தொக்கது. வெகுளி என்னுஞ் சொல்லின் வேர்ப்பொருளே எரிவது என்பதாம். வேகு-வெகுள்-வெகுளி.