எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
மாணாசெய் யாமை தலை.

 

மனத்தான் ஆம் மாணா- மனத்தோடு கூடிய தீய செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை- எக்காலத்தும் எவர்க்கும் எத்துணைச் சிறிதும் செய்யா திருத்தல் தலைமையான அறமாம்.

மனத்தோடு கூடிய செயலாவது அறிந்து செய்யுஞ் செயல். மாணுதல் நன்றாதல். 'மாணா' பலவின் பால் எதிர்மறை விணையாலணையும் பெயர். வலிமையுள்ள காலத்தையும் உட்படுத்த 'எஞ்ஞான்றும்' என்றும் எளியாரையும் விலக்க 'யார்க்கும்' என்றும் "சிறு பொறி பெருந்தீ" யாதலானும் சிறுநஞ்சும் பெருந்தீங்கு செய்தலானும் சிறுவினையும் தீயது தீவினையே என்று கருதி எனைத்தானும் என்றும் கூறினார்.