அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்.

 

செயல் அற்கா இயல்பிற்று- செல்வம் யாரிடத்தும் நிலைக்காத தன்மையுடையது; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல்- ஆதலால் , அத்தகைய செல்வத்தை ஒருவன் பெற்றால் நிலையான பயனுள்ள அறங்களை அப்பொழுதே செய்து கொள்க.

அல்குதல் தங்குதல்; அல்லது நிலைபெறுதல் அல்கா என்பது ஓசைநயம் பற்றி வலித்தது. இவ்வதிகாரமும் ஈரறத்திற்கும் பொதுவாதலால், இல்லறத்தான் செல்வம் பெறின் தனக்கு மிஞ்சியதை விருந்தோம்பல், ஒப்புரவொழுகல் முதலிய வழிகளிலும், துறவறத்தான் செல்வம் பெறின் முழுவதையும் கோயில் வழிபாடு, இலவசக்கல்வி முதலிய வழிகளிலும், செலவிட வேண்டுமென்பது கருத்து. செல்வம் பெறுவது அரிதாதலின் 'பெறின்' என்றும், யாக்கையும் செல்வமும் நிலையாதனவாதலின் செல்வத்தை உடனே பயன் படுத்த வேண்டுமென்பார் 'ஆங்கே' யென்றுங் கூறினார்.