நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

 

ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை - ஒருவன் நேற்றிருந்தான், இன்றில்லை; என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு - என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம்!

உண்மை உடம்போடிருத்தலையும் இன்மை இறத்தலையும் குறிக்கும், இரட்டுறலால் உண்மை பிறத்தலையுங் குறிக்குமேனும், குழவிப் பருவத்திறப்பு மிகச் சிறுபான்மையாதலானும், குழவியை அஃறினைச் சொல்லாலன்றி ' ஒருவன் ' என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையானும்,

வீற்றிருந் தாளன்னை வீதி தனிலிருந்தாள்
நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள்


என்று பட்டினத்தடிகள் பாடியது போல், "நேற்றிருந்தான், இன்றில்லை" என்று இளைஞரையும் முதியோரையும் பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ்வுரை சிறப்புள்ளதன்றாம். ' ஒருவன்' என்னும் ஆண்பால் தலைமை பற்றிப் பெண்பால் ஒன்றன்பாலையுந் தழுவும். ' பெருமை' என்றது எதிர்ப்பொருளணி (Irony) யாதலால், ' நிலையாமை மிகுதி' என்று கொள்ளத் தேவையில்லை.