குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு.

 

உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்போடு உயிருக்குள்ள உறவு; குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்த அற்றே - முன் தனியாது உடனிருந்த முட்டைக்கூடு பின்பு பிரிந்து தனித்துக்கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு ( வெளிவந்து இறக்கை முளைத்த பின் ) பறந்துபோன தன்மைத்தே.

குடம்பை என்னும் சொற்குச் சேக்கை ( பறவைக்கூடு ), முட்டைக்கூடு, புழுக்கூடு என முப்பொருள்கள் உள.

"வரியுடல் சூடிக்குடம்பைநூல் தெற்றி" எனக்கல்லாடம் (கணபதிதுதி, 26-ஆம்வரி) புழுக்கூட்டைக்குறித்தது. "குடம்பைமுட் டையுங் கூடுமாகும்". என்பது பிங்கலம் ( 10. 352)

குறளிலுள்ள குடம்பை என்னும் சொற்குப் பறவைக் கூடு என்று மணக்குடவ பரிதி காலிங்கரும். முட்டைக்கூடு என்று பரிமேலழகரும், பொருள் கொண்டனர். இவர் இங்ஙனம் வேறுபடக்கரணியம் இரண்டிற்கும் குடம்பை, கூடு என்பன பொதுப்பெயரா யிருப்பதும் உயிர் உடம்பினின்று பிரிந்துபோவதற்குப் பறவை தன் கூட்டைவிட்டுப் பிரிந்து போய்விடுவதை நாலடியார்ச்செய்யுளொன்று உவமங் கூறியிருப்பதுமாம். ஆயின், திருக்குறள்மாந்தனுயிரையே சிறப்பாகக்கருதினாலும், தாய்ப்பாலுண்ணிகட் கெல்லாம் ( Mammalia ) பொதுவான உயிரையும் அதன் உடம்பையுமேபற்றிக் கூறியிருக்க. நாலடியார்ச்செய்யுள் மாந்தனுயிரையும் அவனுடம்பையுமேபற்றிக் கூறியதுடன், அவன் பிறந்த குடும்பத்தையுஞ்சேர்த்துக் கூறியுள்ளது. இதுவே உவமவேறுபாட்டிற்குக்கரணியமாம்.

"கேளாதே வந்து கிளைஞரா யிற்றோன்றி
வாளாதே போவரான் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து."


என்பது அந்நாலடியார்ச் செய்யுள் ( 20)

இதன் பொருள்: மாந்தர் ஒரு குடும்பத்தில் ஒருவரை யொருவர் கேளாமலே உறவினராக வந்து பிறந்து, பின்புதாம் இறக்கும் போதும், பறவை மரத்தில் தான் கட்டிய கூட்டை விட்டுவிட்டு அம்மரத்திற்குச் சொல்லாமலே நெடுந்தொலைவு நீங்கிச்சென்று விடுவது போல, தம் உறவினருக்குச் சொல்லாமலே தம் உடலை அவரிடம் விட்டுச்சென்று வீடுவர், என்பதாம்.

பறவை மரத்தைக் கேளாமலே வந்து அதில் தான் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தற்குக் கட்டிய கூட்டை; அவ்வினை முடிந்தபின் விட்டுவிட்டு அம்மரத்திற்குச் சொல்லாமலே நீங்கிப்போய் விடுவது போல, மாந்தரும் தம்பழவினையின் ஒரு பகுதியான இருவினைப் பயனை நுகர்தற்குத்தாம் எடுத்தவுடம்பை, அந்நுகர்ச்சி முடிந்தவுடன்தம் உறவினரிடம் விட்டுவிட்டு அவருக்குச் சொல்லாமலே நீங்கிவிடுவர் என்பது, உவமை விளக்கமாம். இதில், குடும்பத்திற்குமரமும், மாந்தன் உயிர்க்குப் பறவையும், அவனுடம்பிற்குக் கூடும் உவம மாம்.

திருவள்ளுவர் பாலுண்ணிகளின் அல்லது மாந்தரின் உயிரும் அதன் உடம்பும் உடன்தோன்றிப் பின்பு உயிர் பிரிவதையே கூறுவதால், உடம்பிற்கு முட்டைக் கூட்டை உவமங்கொள்வதே பொருத்தமாம். ஆயினும், குஞ்சு முன்னைக் கூட்டினின்று வெளிவந்தவுடன் பறவாமையால், வெளிவந்து இறக்கை முளைத்தபின் என்று ஒரு தொடரை இடைச்செருக வேண்டியதாயிற்று. எங்கேனும் பொரித்தவுடன் பறந்து போகும் பறவையின மிருப்பின், அது முழுநிறைவாகப் பொருந்தும் உவமமாம்.

'தனித்தொழிய' என்றதனால், முன்பு தனியாமை பெறப்பட்டது. அதாவது, முட்டைக்கூடு முதலில் நொய்யவுறையாகவும் பின்பு சவ்வாகவும் இறுதியில் தோடாகவும் கருவொடு கூடியிருந்து, குஞ்சுபொரிக்கும் வரை அதற்கு நிலைக்களமாய் நின்றமை. அதனால், அது மாந்தனுயிர் நீங்கும் வரை அதற்கு நிலைக்களமாக உடன்நிற்கும், உடம்பிற்கு உவமமாயிற்று. முட்டைத்தோட்டிற்கும் உடம்பிற்கும், கூடு என்பது பொதுப்பெயராயிருப்பதும், உவமைக்குத் துணையாயிற்று. பறவைக்குஞ்சு முட்டையினின்று வெளிவந்தபின் அதற்குள் மீளப்புகாமையால், உடம்பினின்று நீங்கினபின் அதற்குள் மீளப்புகாத உயிருக்கு உவமமாயிற்று. முட்டைப்பிறவிகளுள் மீன், ஊரி ( Reptile ) முதலிய பிறவினங்களுமிருப்பினும், வான்வெளியிற் செல்லும் உயிருக்கு வான்வெளியிற் பறக்கும் பறவையே சிறந்தவுவமமாகக் கொள்ளப்பட்டது . அறிவதும் உருவில்லாததும் நித்தமானதுமான உயிரும், அறியாததும் உருவுள்ளதும் நித்தமல்லாததுமான உடம்பும், ஒன்றற்கொன்று நேர்மாறாக வேறுபட்டிருப்பதனாலும், வினைவயத்தால் ஒன்று கூடியதல்லது வேறுதொடர்பொன்று மில்லாதனவாதலாலும், உயிருக்கும் உடம்பிற்கும் இடைப்பட்டவுறவை நட்பென்றது எதிர்மறைக் குறிப்பாம் (Irony). ஒழிதல் வினை ஒரேயடியாய் நீங்குதலையும், பறத்தல் வினை விரைந்து செல்லுதலையும், குறித்தன. ஏகாரம் தேற்றம்.