புக்கி லமைந் தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு.

 

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - பலவேறு நோய்கட்கும் பல்வகைப் புழுக்கட்கும் வாழிடமாகிய உடம்புகளுள் நெடுகலும் ஒண்டுக்குடியிருந்தே வந்த உயிருக்கு; புக்கில் அமைந் தின்று கொல்-நிலையாக வதியத்தக்க ஒர் உறையுள் இதுகாறும் அமையலில்லை போலும்!

துஞ்சு+இல்=துச்சில்=ஒதுக்கிடம். புகு+இல்=புக்கில்=புகுந்து பின் நீங்காத நிலையான இருப்பிடம். புக்கில் அமைந்ததாயின் வெளியேறியிரா தென்பதாம். ஆகவே, உயிர் நிற்கக் கூடிய உடம்பு ஒன்று மில்லை யென்பது பெறப்பட்டது. இங்ஙனம் இவ்வதிகாரத்தில், அரிதாய்க் கிடைத்தும் நிலையாத செல்வத்தின் நிலையாமையும் குழவிப்பருவம் முதல் கிழப்பருவம் வரை எந்நொடியிலும் திடுமென இறக்கும் யாக்கையின் நிலையாமையும், இறந்த பின்பும் எல்லையில்லாது துன்பமாலை தொடரும் பிறப்பிறப்பின் நிலையாமையுங் கூறித் துறவதி காரத்திற்குத் தோற்றுவாய் செய்து வைத்தார் 'ஒ' அசைநிலை.