அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு.

 

வேந்தற்கு இயல்பு-அரசனுக்கு இயல்பான தன்மையாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை-அஞ்சாமையும் கொடைத்தன்மையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் குறையாதிருத்தலாம்.

இவற்றுள் அறிவு ஏழுறுப்புக்களையும், ஈகை படையையும் குடியையும் நோக்கியனவாம். ஏனையிரண்டும் வினைக்குரியனவாம். ஊக்கம் என்பது வினைசெய்தற்கண் உண்டாகும் மனவெழுச்சி. இவற்றுள் ஒன்று குறையினும் பகையினாலேனும் படையினாலேனும் குடியினாலேனும் கேடுநேருமாகலின், 'எஞ்சாமைவேந்தற்கியல்பு' என்றார். வள்ளுவர் காலத்தமிழகம் மூவேந்தராட்சிக் குட்பட்டதாகலின் அரசன் வேந்தன் எனப்பட்டான். முடியணியும் உரிமையுடைய சேர சோழ பாண்டியர் மூவரே வேந்தர். வேய்தல் முடியணிதல். வேய்ந்தான்-வேந்தன். உம்மை முற்றும்மை.