கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

 

கல்லா ஒருவன் தகைமை-நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகத் தான் மதிக்கும் மதிப்பும், அவனை அங்ஙனம் பிறர் மதிக்கும் மதிப்பும்; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் -அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும் போது கெட்டுப்போம்.

கற்றவன் என்பது அவாய்நிலையான் வந்தது.
"காணாமல் வேணதெல்லாங் கத்தலாங் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே-நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற்
கீச்சுக்கீச் சென்னுங் கிளி"

என்னும் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் தனியன் இக்குறட் பொருளை விளக்குவதாகும்: