கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை.

 

கற்றிலன் ஆயினும் கேட்க -- ஒருவன் பொருள் நூல்களையும் உறுதிநூல்களையும் கற்றிராவிடினும், அவற்றைக்கற்றுத்தேர்ந்த பேரறிஞரிடம் கேட்டறிக; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - அக்கேள்வியறிவு ஒருவனுக்கு உலகியல் துறையிலேனும் ஆதனியல் (Spiritual) துறையிலேனும் தளர்ச்சி நேர்ந்த விடத்து ஊன்று கோலாந் துணையாகும்.

இழிவு சிறப்பின் பாற்பட்ட ஒத்துக்கொள்வு (Concessive ) உம்மை, கற்றிருத்தல் வேண்டுமென்னுங் குறிப்பினது.

"கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்-தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு" (நாலடி, 139).

தளர்ச்சியாவது, வறுமையாலேனும் அறியாமையாலேனும் நோயினாலேனும் இழப்பினாலேனும் நேரும் மனத்தடுமாற்றம். 'ஊற்று' முதனிலை திரிந்த தொழிலாகுபெயர். 'அஃதொருவற்கு' என்பது 'அதுவொருவற்கு' என்றிருந்திருத்தல் வேண்டும்.

"அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் "(74),
"ஈத லிசைபட வாழ்த லதுவல்ல(து)"(231),
"பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்(து)"(533)
"கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல"(து)(570),
"கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல்"(1144)

என்னும் அடிகளை நோக்குக.