உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

 

உற்ற நோய் நீக்கி -தெய்வத்தால் அல்லது மக்களால் நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி; உறாமை முன் காக்கும் பெற்றியார்- அத்தகையன பின்பு நேராவண்ணம் முன்னறிந்து காக்க வல்ல தன்மையுடையாரை; பேணிக் கொளல் -அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க.

தெய்வத்தால் வருந்துன்பங்கள் மழையின்மை, மிகுமழை, கடுங்காற்று, கொள்ளைநோய், நிலநடுக்கம், கடல்கோள் முதலியன . அவை இறைவனை நோக்கிச்செய்யும் விழாக்களாலும் வேண்டுதல் களாலும் நோன்பினாலும் நீக்கப்படும். மக்களால் வருந்துன்பங்கள் பகைவர் செய்யும் போர், கள்வர் செய்யுங்களவு, கொள்ளைக்காரர் செய்யுங் கொள்ளையடிப்பும் ஆறலைத்தலும், சுற்றத்தாரும் வினைசெய்வாரும் செய்யும் களவுங் கொடுமையும் முதலியன. அவை இன் சொல் (சாமம்) பிரிவினை (பேதம்) கொடை தண்டம் ஆகிய நால்வகை ஆம்புடையுள் (உபாயத்துள் ) ஏற்ற ஒன்றால் அல்லது பலவற்றால் நீக்கப்படும். முற்காத்தலாவது, தெய்வத்தால் வருபவற்றைத் தீக்குறிகளால் அறிந்து விழவு நோன்பு முதலிய சமந்தியால் (சாந்தியால்) தடுத்தலும், மக்களால் வருபவற்றை அவர் குணம், குறிப்பு (இங்கிதம்), தோற்றம் (ஆகாரம்), செயல், சொல் முதலிய வற்றாலறிந்து நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றால் தடுத்தலும், ஆம். குறிப்பு உறுப்பின் தொழில்; தோற்றம் உடம்பின் பார்வை வேறுபாடு.மகிழ்வன செய்தலாவது, முற்றூட்டும் பட்டமுமளித்தலும் கண்ணியமாக நடத்துதலும் கூறிய அறிவுரையைக் கடைப் பிடித்தலுமாம்.

"கடவுளரையுந் தக்கோரையும் நோக்கிச் செய்யுஞ் சாந்தி" என்று சிறுதெய்வ வணக்கத்தையும், ஆகவே, "புரோகிதரையும்-----------கூறியவாறாயிற்று " . என்று பிராமணப்பூசாரியரையும், பரிமேலழகர் இங்குக் குறித்திருப்பது தவறாம்.

தானம் என்னுஞ் சொல் தமிழேயாயினும், அது அறப்புறங்கட்குக் கொடுப்பதையே சிறப்பாய்க் குறித்தலின் இங்கு விலக்கப்பட்டது. 'உறாஅமை' இசைநிறையளபெடை.