பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

 

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - வைக்கோலினும் நொய்ய மயில்தோகை யேற்றிய வண்டியும் அச்சு முறியும் ; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பொருளை வண்டிதாங்கும் அளவிற்கு மிஞ்சி யேற்றின் .

மயில்தோகையும் அளவுக்கு மிஞ்சி வண்டியிலேற்றின் அச்சொடியும் என்பது , பகைவர் தனித்தனி மிகச்சிறியாராயினும் மிகப்பலர் ஒன்று கூடின் , தனிப்பட்ட பகைவன் எவ்வளவு வலியவனாயினும் அவனை வென்று விடுவர் என்னும் பொருள்பட நிற்றலால் , பிறிதுமொழிதல் என்னும் அணியாம் .இது நுவலாநுவற்சியென்றும் ஒட்டு என்றுஞ் சொல்லப்படும் . பகைவர் சிறியராயினும் மிகப்பலரை ஒருங்கே பகைக்கக் கூடாதென்பதும் , பகைவர் வலியைத் தனித்தனி அறியாது தொகுத்தறிதல் வேண்டுமென்பதும் , இதனாற் கூறப்பட்டன . உம்மைஇழிவு சிறப்பு , சாகாடு என்பது சகடம் என்னும் சொல்லின் பல்வடிவுகளுள் ஒன்றாம் . இதுவுந்தென்சொல்லே . 'இறும்' என்னும் துணைவினை முதல்மேல் நின்றது , 'காலொடிந்தான்' என்பதில் ஒடிந்தான் என்பது போல . 'சாலமிகுத்து' மீமிசைச்சொல் .