ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து.

 

ஆற்றின் ஒழுக்கி - தவஞ்செய்வாரைத் தவநெறியில் ஒழுகச் செய்து; அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தானும் தன் அறத்தினின்று தவறாத, இல்லறவாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத்தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை யுடையது.

பசி தகை முதலிய இடையூற்றை நீக்கலின் 'ஆற்றினொழுக்கி' என்றார். இல்வாழ்வான் தன்மை அவன் வாழ்க்கைமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இல்லறத்தையுங் காத்துத் தவநெறியையும் ஊக்குவது, தவநெறியை மட்டுங் காப்பதினும் வலிமையுடைத்தாயிற்று. நோற்பார் என்பது ஆகுபொருட்சொல்.