கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து .

 

கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேல் செல்லாதிருக்குங் காலத்து மீன்தேடுங் கொக்குப்போல் ஒடுங்கியிருக்க ; மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - மற்றுச் செல்லுங்காலம் வாய்த்த விடத்து அக்கொக்கு விரைந்து மீனைக்கொத்துவதுபோல் விரைந்து பகைவனைத் தாக்குக .

கூம்புதல் குவிதல் . குவிதல் ஒடுங்குதல் . மலரின் ஒடுக்கம் அரசரின் வினையொடுக்கத்திற்கு உவம மாயிற்று . 'ஓடுமீனோடியுறு மீன் வருமளவும் - வாடியிருக்குமாங் கொக்கு' ( மூதுரை , 16) தனக் கேற்ற மீன்வரும்வரை அது முன்னறிந்து தப்பாமைப் பொருட்டுத் தவஞ்செய்வான் போல் அசைவற்று நிற்றலும் , அது வந்தவுடனே திடுமென்று கொத்துதலும் , அரசன் காலம் வரும்வரை பகைவர் ஐயுறாவாறு அமைந்திருத்தற்கும் அது வந்தவுடன் விரைந்து வினைமுடித்தற்கும் . சிறந்த வுவமமாயின . இதனால் இருப்பு வினைகளின் இயல்பும் விளக்க மாயின