சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது .

 

சிறைநலனும் சீரும் இலர் எனினும் - அழித்தற் கரிய அரண்சிறப்பும் பெரும்படையும் பெரும்பொருளுமாகிய பிற பெருமையும் இல்லாதவராயினும் ; மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது - போர் வினைக்குச் சிறந்த மாந்தரை அவர் நிலையாக வதியும் இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிதாம் .

ஒட்டல் பொருந்துதல் ; இங்குப் பொருந்திப் பொருதல் . ஆதலால் , பரிமேலழகர் குறித்தவாறு வேற்றுமை மயக்கம் அன்றாம் . அரிமாவும் வரிமாவும்போற் பொரும் ஆண்மை யுடையாரை தொகைச் சிறுமை நோக்கி யிகழ்ந்து அவரிருப்பிடஞ் சென்று தாக்கின் , அவர் மறமிகுதியானும் வேறிடமின்மையானும் உயிரைப் பொருட்படுத்தாது ஊன்றிப்பொருவர் . அதனாற் பெரும்படையும் அவர்க்கு உடையும் என்பதாம் . "ஊக்கம் ஒன்பது ஆளை அடிக்கும்" என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.