இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

 

இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும்.

வழிதெரியாத இருள் போலிருத்தலின் அறியாமையை இருளென்றும், நல்வினையும் பிறவிக்கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்) ஆதலின் இருவினையுஞ் சேராவென்றும் கூறினார். மக்கள் எத்துணைப் பெரியோராயிருப்பினும் அவரின் அறிவாற்றலுங் காலமுங் குறுகிய வரையறைப்பட்டிருப்பதனாலும், அவரை மகிழ்விக்கக் கூறும் புகழுரைகளெல்லாம் உயர்வுநவிற்சியும் இன்மைநவிற்சியுமேயாதலாலும், எல்லாவாற்றலும் என்றும் நிறைந்திருக்கும் இறைவன் புகழே பொருளுள்ள புகழ் எனப்பட்டது. புரிதல் - விரும்பிச் சொல்லுதல். இறைவன் - எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல். நல்வினை பிறவிக்கேதுவாவது கடவுள் வழுத்தொடு கூடாத போதும் தீவினையொடு கலந்த விடத்துமாம்.