காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும் .

 

காதன்மை கந்தா - பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு ; அறிவு அறியார்த் தேறுதல் - தம் வினைக்கு அறியவேண்டியவற்றை அறியாதாரைத் தெளிந்து அமர்த்துதல் ; பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு அறியாமையால் விளையுந் தீங்குகள் பலவற்றையும் உண்டாக்கும்.

அறிவிலாரைத் தனக்கு மவர்க்குமிடைப்பட்ட பேரன்பு பற்றிக் கண்ணோடி அரசன் வினைத்தலைவராக்கின், அவரால் வினை அடியோடு கெடும் . அதனால் , அரசன் கெடுவதுடன் வினையறியாதவன் , வினைக்குரியாரை அறியாதவன் , தன்னாக்கம் அறியாதவன் , குடிகள் நலமறியாதவன் எனப்பல அறியாமைப் பட்டங்களும் பெற நேரும் . ஆக என்னும் குறிப்புவினையெச்சவீறு 'ஆ' எனக்கடைக்குறைந்து நின்றது . 'பேதைமை' ஆகு பொருளது.