அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

 

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - உறவினத் தொடு உள்ளக் கலப்பில்லாதவன் செல்வவாழ்க்கை ; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்த அற்று - குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போலும்.

கரையில்லாத குளத்துநீர் காப்பின்றி வெளிச்சென்று விடுவது போல , உறவின மில்லாதவன் செல்வழுங் காப்பாரின்றிப் பிறர் கைப்பட்டு விடும் என்பதாம் . உறவினத்தொடு என்பது அதிகாரத்தால் வந்தது . அளவுதல் - கலத்தல் அல்லது கலந்துபேசுதல் . 'அளாவு' அளவு என்பதன் நீட்டம் . அளவளாவு(தல்) என்பது அளப்பள(த்தல்) என்பது போல் பெயரும் வினையுஞ் சேர்ந்த கூட்டுச்சொல் .அது இங்கு முதனிலைத் தொழிற்பெயராக நின்றது . வாழ்க்கை யென்றது செல்வத்தோடு கூடிய நல்வாழ்க்கை , நிறைதல் என்பது குளத்திற்கும் நீர்க்கும் பொதுவினையாதலின் , 'நீர் நிறைந்தற்று' , என்பது நீரால் நிறைந்தற்று என்னும் பொருள் படநின்றது . 'ஆன்றோர் அறிவுநிறைந்தோர்' என்னுந்தொடரமை தியை இதனொடு ஒப்புநோக்குக.