இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

 

வையகம் எல்லாம் இறை காக்கும் - உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ; முட்டாச் செயின் அவனை முறைகாக்கும் - முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும்.

முட்டில்லாமற் செய்தல் மனு முறைச் சோழன் தன்மகனை முறை செய்ததும், கொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும் , போல்வதாம் . இனி, சிக்கலான வழக்குக்களைத் தீர்க்கும் வழியை இறைவனிடம் மன்றாடிக் கேட்டறிந்ததும் , முட்டாது செய்தலின் பாற்படும் . 'வையகம்' முதலாகுபெயர் . 'முட்டா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.