எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும்.

 

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை ( நியாயம் ) வேண்டினவர்க்குக் காட்சிக் கெளியனாயிருந்து , அவர் சொல்லியவற்றை அறநூலறிஞருடன் ஆராய்ந்து , உண்மைக் கேற்பத் தீர்ப்புச் செய்யாத அரசன் ; தண்பதத்தான் தானேகெடும் - தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான்.

"அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்" (சிலப்பதிகாரப் பதிகம் . 55) என்றதற் கேற்ப , முறை செய்யா அரசன் பகைவரின்றியுந் தானே கெடுவான் என்பதாம் . பதம் நிலைமை . எண்மை எளிமை. 'எண்பதத்தான்' குறிப்பு முற்றெச்சம் . 'ஓரா' செய்யா என்னும் வாய்ப்பாட்டு (இறந்தகால வுடன்பாட்டு ) வினையெச்சம் . 'செய்யா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 'தண்பதம்' பழியும் பளகும் (பாவமும் ) அடைந்து நிற்கும் நிலை . ஏகாரம் பிரிநிலை.