குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.

 

குடி புறங்காத்து ஓம்பிக்குற்றம் கடிதல் - தன்குடிகளைப் பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வருத்தாது பேணி , அவர் குற்றஞ் செய்யின் அதைத் தண்டனையால் நீக்குதல் ; வேந்தன் வடு அன்று தொழில் - அரசனின் குற்றமன்று , அவன் கடமையாம்.

'குடிபுறங் காத்தோம்பி' என்றதனால் , சில தீயோரின் 'குற்றங் கடிதலும்' நல்லோரான குடிகளைப் பாதுகாத்தற் பொருட்டே யென்பது பெறப்படும் . அரசன் குற்றவாளிகளைத் தண்டிக்கும் முறை மன்றுபாடு , தண்டா , குற்றம் என மூவகைப்படும் . மன்றுபாடென்பது பணத்தண்டனை ; தண்டா என்பது துன்பத்தண்டனையும் உறுப்பறைத்தண்டனையும் கொலைத் தண்டனையும் ; குற்றம் என்பது கோயில் விளக்கெரித்தல் போன்ற திருக்கடமைத் தண்டனை . துன்பத்தண்டனை பொதுவும் இடந்தோறும் வேறுபடுவதும் என இரு திறத்ததாம் . அவை மீண்டும் மானக்கேட்டொடு கூடியதும் கூடாததுமென இருவகையனவாம் . குற்றங் கடிதல் என்றதனால், இங்குத் தழுவப்பட்ட தண்டனை வகைகள் கொலையொழிந்த எல்லாமாகும்.