கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம்.

 

கடுமொழியும் கையிகந்த தண்டமும் -பொறுக்கத்தகாத கடுஞ்சொல்லும் குற்றத்தின் அளவிற்கு மிஞ்சிய தண்டனையும் ; வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் - அரசனது பகையை வெல்லுதற்கேற்ற வலிமையாகிய இரும்பைத் தேய்த்தழிக்கும் அரமாம்.

கடுஞ்சொல்லாலும் கரைகடந்த தண்டத்தாலும், குடிகளும் வினை செய்வாரும் அன்புகுன்றி அரசனது வலிமை சுருங்கிவருமாதலால், அவ்விரண்டையும் அரமாகவுருவகித்து, 'அடுமுரண்' எவ்வளவு வலியதாயினும் அழிந்துபோம் என்பதை ,திண்ணிய இரும்பையும் அரம்தேய்த்துவிடும் என்னும் உவமையாற் பெறவைத்தார்.கடுமொழியையுங் கையிகந்த தண்டத்தையும் ஈரரமாகவோ இருபுறமும் அராவும் ஓரரமாகவோ கொள்க.இக்குறளால் குடிகளும் வினைசெய்வாரும் அஞ்சும் வினைகள் கூறப்பட்டன. அடுமுரணை இரும்பாக வுருவகிக்காமையால் இதில் வந்துள்ளது ஒருமருங்குருவகம்.