பொருட்பால்
அரசியல்

அதிகாரம். 62. ஆள்வினையுடைமை

அஃதாவது, இடைவிடாது கருமத்தை ஆண்டு நடத்துந்திறம்.இது மடியின்மையால் நேர்வதாகலின் அதன்பின் வைக்கப்பட்டது.

 

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

 

அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - ஒரு வினை செய்யுமுன் தம்மைச்சிறியவராகக் கருதி அவ்வினை தம்மாற் செய்தற்கு அரிதென்று தளராமை வேண்டும் ; முயற்சி பெருமை தரும் - முயற்சியே அவ்வினையைச் செய்து முடித்தற் கேற்ற பெருமையைத் தமக்கு உண்டாக்கும் .

சிறியவராகக் கருதி யென்பது பெருமை தரும் என்பதால் வருவிக்கப்பட்டது . வினை செய்தல் என்பது அதிகாரத்தால் வந்தது . விடா முயற்சியால் அரிய வினையும் எளியவினையாம் . ஆகவே , வினைமுடிப்பிற்கு ஏதுவாக மட்டு மன்றி அதன் விளைவாகவும் பெருமை உண்டாகுமென்பதாம்.