மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான்
றாளுளா டாமரையி னாள்.

 

மாமுகடி மடி உளாள் -கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் - திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள்; என்ப -என்று சொல்லுவர் அறிந்தோர்.

கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னுஞ் சொற்குப்பாழ் என்னும் பொருளிருப்பதால் , பாழான நிலைமையுண்டு பண்ணுபவள் முகடி யென்றுமாம். அவளது பேய்த்தன்மையாலும் வறுமையின் பஞ்சத்தன்மையாலும் ,அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப்பட்டது. திருமகள் செந்தாமரை மலர்மேல் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுவதால் , தாமரையினாள் எனப்பட்டாள். தாமரை யென்னும் செந்தாமரைப்பெயர் இன்றுதன் சிறப்புப் பொருளிழந்து வழங்குகின்றது. வறுமையும் செல்வமும் அமைவதை, அணிவகைபற்றி, அவற்றிற்குரிய தெய்வங்கள் தங்குவதாகக் கூறினார். அக்கூற்றிலும் பண்பியின் நிலைமை பண்பின்மேல் ஏற்றப்பட்டது. முகடி சோம்பேறியின் மடியிலும், திருமகள் தாளாளனின் காலிலும் தங்குவர் என்று ,வேறும் ஒரு போலிப்பொருள் தோன்றுமாறுஞ் செய்தார்.