இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.

 

மேல்-மேலோர்; உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று- இவ்வுலகத்தில் இருதிணை யுயிரோடு கூடிய உடம்புகளும் துன்பம் என்னும் வேலுக்கு இலக்கென்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாது- தமக்குத் துன்பம் வந்த விடத்து மனங்கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளார்.

இலக்கு - குறி. இலக்கு-இலக்கம். போர்மறவர் வேலெறிந்து பழகுவதற்குக் குறிமரமாக நிறுத்தப்படும் கம்பம் இலக்கம் எனப்படும்.

".......................வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலினர் எறிந்த அகலிலை முருக்கின்
பெருமரக் கம்பம்---------------"


என்பது புறம் (169). உடம்பு துன்பத்திற்கு இத்தகைய இலக்கம் என்றது அதன் இயல்பு நோக்கி. 'உடம்பு' வகுப்பொருமை. 'மேல்' ஆகுபொருளது; சொல்லால் அஃறிணையாதலால் அத்திணைமுடிபு கொண்டது. 'ஆம்' அசைநிலை. 'கலக்கத்தைக் -------கொள்ளாது' என்றது இயல்பென்றறிந்து கலங்காது என்பதாம். இடும்பையை வேலென்று உருவகியாமையால் இங்குள்ளது ஒரு மருங்குருவகம்.