பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ
ரெழுபது கோடி யுறும்.

 

பழுது எண்ணும் மந்திரியில் - நன்மை செய்கிறவன்போல் அருகிலிருந்து கொண்டு தீமையை எண்ணும் அமைச்சன் ஒருவனில்; பக்கத்துள் ஓர் எழுபது கோடி தெவ் உறும் - அரசனுக்குப் பக்கமாகவே எழுபது கோடிப் பகைவர் அமைவர்.

புறப்பகைவர் பலராயினும் அவருக்குத் தப்பமுடியும். அகப்பகைவராயின், அவருள்ளும் சூழ்ச்சித்துணையாயிருக்கும் அமைச்சனே வீழ்ச்சித்துணையாயிருப்பின், ஒருவனே யாயினும் தப்ப முடியாதாம். ஆதலால் 'பக்கத்துள்தெவ் எழுபது கோடியுறும்' என்றார். ஏழு என்பது நிறைவான எண்ணும் கோடி என்பது பேரெண்ணுமாதலால், எழுபது கோடி யென்றது உண்மையில் அதனினும் மிகப் பெரிய தொகையையே. அதனால் அழிவிற்குத் தப்ப முடியாது என்னும் உண்மையைக் குறித்தார். அமைச்சன் என்றும் அரசனுக்குப் பக்கமாகவே யிருப்பவனாதலாலும், பழுதெண்ணும் மந்திரியால் வருங்கேட்டிற்குத் தப்பமுடியா தென்பதையே ஆசிரியர் வலியுறுத்த விரும்புவதாலும் , 'பக்கத்துள்தெவ்' என்றே குறளிற் சொற்றொடர் நிற்றலாலும், 'பக்கத்துள்' என்னுஞ் சொல் 'தெவ்' என்பதையே தழுவுவதாம். பகைவர் மாபெருந் தொகையராயினும், சேய்மையில் நிற்பவரினும் அண்மையில் நிற்பவரால் அழிவு உறுதியாதலை எண்ணிக் காண்க. இதனால், அரசன் விழிப்பாயிருந்து ஒற்றர் வாயிலாக உண்மை யறிந்து, ஐயுறவிற்கிடமான அமைச்சனை உடனே விலக்கவேண்டு மென்பது கூறப்பட்டது.

'எழுபது கோடியுறும்' என்பதற்கு எழுபது கோடிமடங்கு நல்ல ரென்றுரைப்பது பொருந்தாது. இனி, "எழுபது கோடி தலை" என்றும் எழுபது கூறு தலை என்றும், பண்டை யுரையாசிரியன்மார் கொண்ட பாடமும் பொருந்துவன வாகா.