இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார்.

 

கற்றது உணர விரித்து உரையாதார் - தாம் கற்று வைத்த நூற்பொருளைப் பிறர் தெளிவாக அறியும் வண்ணம் விளக்கிச் சொல்லும் ஆற்றல் இல்லாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தாக மலர்ந்திருந்தும் மணந்தராத பூவையொப்பர்.

நன்றாக விரிந்திருந்தும் மணமில்லாத பூப் பயன்படாததுபோல் விரிவாகக் கற்றிருந்தும் விளக்கிச் சொல்லும் திறமையில்லார் பிறர்க்குப் பயன்படார் என்பதாம். இணரூழ்த்தல் என்ற உவம அடை பல்துறைக்கல்வி யாகிய பொருளியல்பை யுணர்த்தும். மணமில்லா மலர்க்கு முருக்கம் (முள்முருங்கைப்) பூவை எடுத்துக்காட்டினர் பரிதியார். நாறுதல் என்னும் பொதுப்பொருள் வினைச்சொல், செய்யுள் வழக்கில் நறுநாற்றத்தையும் உலக வழக்கில் தீநாற்றத்தையும் உணர்த்தும். உம்மை எச்சம்.

"எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்துஞ்
சொல்வன்மை யின்றெனின் என்னாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து. (நீதிநெறி. 5)


என்பது சொல்வன்மையின் சிறப்பை எடுத்துக் காட்டும்.