சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

 

சலத்தான் பொருள் செய்து ஏமார்த்தல்-அமைச்சன் வஞ்சனையாற் பொருளீட்டி அதனால் அரசனுக்குப் பாதுகாப்புச் செய்தல்; பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - ஈரம் புலராத பச்சைமட் கலத்துள் நீரை வார்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்ததனோ டொக்கும்.

நீரோடு பசுமட்கலங் கெடுவது போல் வஞ்சனைப் பொருளோடு அரசன் கெடுவான் என்பதாம். ஆக்கஞ் செய்வது போல் முன் தோன்றிப் பின்பு அழிவைச் செய்வதால். 'சலத்தால்' என்றார். 'சலம்' வடசொல். ஏமாத்தல் என்பது ஏமாத்தல் என ரகரங்கெட்டு நின்றது. ஏமம்-பாதுகாப்பு. ஆர்தல்-பொருந்துதல், ஆர்த்தல்-பொருத்துதல். 'இரீஇ' இருத்தி யென்று பொருள் படும் சொல்லிசையளபெடை. இருத்துதல் நீண்டகாலம் இருக்கச் செய்தல்.