கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி
னெற்றா விழுமந் தரும்.

 

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை=மறைத்துச் செய்ய வேண்டிய வினைகளை முடிந்த பின்னரே வெளிப்படுமாறு கமுக்கமாய்ச் செய்வதே வினைத்திட்பமாம்; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்-அங்ஙன மன்றி அத்தகைய மருமவினைகள் இடையில் வெளிப்படுமாயின், நீக்க முடியாத் துன்பந் தருவனவாம்.

மறைவாகச் செய்யவேண்டியவை படையெடுப்பிற்கு வட்டங்கூட்டுதல் (ஆயத்தஞ் செய்தல்), பெரியாரைத் துணைக் கோடல், வல்லரசனொடு மணவுறவு கொள்ளுதல், பெரும் புதையலைக் கைப்பற்றுதல் முதலியன. மறைவு வெளிப்படும் வகைகள், செயலும் சொல்லும் உடையும் வடிவும் குறிப்பும் பொருளும் கருவியும் பிறவுமாம். வினைத்திட்பம் ஆண்மைக் குணமாதலின் ஆண்மையெனப்பட்டது. "ஒருவரறிந்தது உலகறிந்தது." ஆதலின், இயன்றவரை பிறக்குத் தெரியாது வினை முடித்தல் வேண்டு மென்பதும், தெரியின் பின்பு ஒருகாலும் திருந்த முடியாவாறு பகைவர் தடுப்பால் வினை கெட்டுவிடு மென்பதும், அதனாற் பெருந்துன்பம் விளையுமென்பதும், உணர்த்தற்கு 'இடைக்கொட்கின் எற்றா விழுமந்தரும்' என்றார்.

எடுத்த வினையை இறுதிவரை செய்து முடிப்பதே ஆண்மையென்றும், இடையில் விட்டுவிடுவது பெருந்துன்பம் தரும் என்றும், மணக்குடவரும் பரிப்பெருமாளும் பரிதியாரும் காலிங்கரும் உரைத்திருப்பது சிறந்ததன்று. 'கடைக்கொட்பின்' என்பது காலிங்கர்பாடம். இவருள் முன்னிருவரும் வெளிப்படையாகவும் பின்னிருவரும் குறிப்பாகவும், கொட்குதல் என்னும் வினைக்குச் சுழலுதல் என்று பொருள் கொண்டனர்.