வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

 

வினையால் வினை ஆக்கிக் கோடல்-ஒரு வினையைச் செய்யும் பொழுதே அதனால் வேறுமொரு வினையை முடித்துக் கொள்ளுதல்; நனைகவுள் யானையால் யானை யாத்த அற்று-மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய யானையால் வேறுமொரு யானையைப் பிடித்துக் கட்டிய தொக்கும்.

உவமம் பெருவினை எளிதில் முடிவதைக் காட்டும். 'நனைகவுள்' என்பது 'வினையால்' என்பதற்கு எதுகை யாகவே வந்ததனால், 'நனைகவுள் யானை' என்பது களிறு என்னும் அளவாய் நின்றது. அல்லாக்கால், மதயானை பெண்யானையாலன்றி ஒருவகையிலும் அடக்கப்படாததாயும் ஒரு வினைக்கும் பயன்படாததாயும் இருக்குமாதலின், 'யானையால்யானை யாத்தற்று, என்னும் உவமை பொருந்தாதென்க. ஒரு கல்லில் இரு குருவியை வீழ்த்துவதும், ஒரு குண்டில் இரு புறாவைச் சுடுவதும் போல், ஒரு முயற்சியால் இருவினையை முடிக்கும் வகை இதனாற் சொல்லப்பட்டது. அதற்கேற்ப எண்ணிச் செய்க என்பது கருத்து.