இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாந் தூது.

 

இறுதி பயப்பினும் - தான் கூறுஞ்செய்தியால் தன் உயிரிழக்க நேரினும் எஞ்சாது - அஞ்சி விட்டு விடாது; இறைவற்கு உறுதி பயப்பது - தன் அரசன் சொல்லியவாறே வேற்றரசரிடம் செய்தியைச் சொல்லித் தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே; தூது ஆம் -சரியான தூதனாவன்.

உம்மை உயர்வு சிறப்பு. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது. அதிகமானுக்குத் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார் வகுத்துரைப்பார் வகையினராயினும், இறுதிபயப்பினும் உறுதி பயக்கும் தூதிற்கு, அவர் பாடிய

"இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிரள் நோன் காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயின் உடனுண்ணும்
இல்லோ ரொக்கல் தலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே."

(புறம். 95)

என்னும் பாட்டுச் சிறந்த எடுத்துக் காட்டாம்.