போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
றேற்றுதல் யார்க்கு மரிது.

 

போற்றின்அரியவை போற்றல்-அமைச்சர் தம்மைக் காக்க விரும்பின் கடும்பிழைகள் தம்மேல் வராமற் காத்துக் கொள்க; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது-அவற்றை நிகழ்ந்தனவாகக் கேள்விப்பட்டு அரசர் ஐயுற்றபின்அவரைத் தெளிவித்தால் எத்துணைச் சிறந்தவர்க்கும் அரிதாம்.

கடும்பிழைகள் பகைவராற் கீழறுக்கப்படுதல், அரசர்க்கேயுரிய உரிமை மகளிரொடு பழகுதல், அரசன் உத்தரவின்றி அவனறைக்குட் புகுதல், அரும்பொருள் கவர்தல் முதலியன. கீழறுக்கப் படுதலாவது பகைவரிடம் பொருள் பெற்றுக்கொண்டு அவருக்குத் துணையாயிருக்க உடன்படுதல் இது அறைபோதல் எனவும்படும். இத்தகைய குற்றங்கள் வராமற் காத்தலாவது, யாரேனும் இவை நிகழ்ந்ததாக அரசனிடம் சொல்லினும், அதை கடுகளவும் நம்பாதவாறு தூய்மையாக ஒழுகுதல். ஒருமுறை ஐயுற்றபின், அதை ஒருவகையால் தெளிவித்தாலும், அவர் உள்ளத்தில் அது என்றும் நிலைத்திருக்குமாதலின்,'யார்க்கு மரிது'என்றார். உம்மை உயர்வுசிறப்பு.