பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

 

பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ்வைந்து - நோயின்மை, செல்வம், விளையுள் , இன்ப முண்மை, பாதுகாப்பு ஆகிய இவ்வைந்தும்; நாட்டிற்கு அணி என்ப - ஒரு நாட்டிற்கு அழகு என்று சொல்வர் அறிஞர்.

'பிணியின்மை' நிலநலம், நீர்நலம், உணவுநலம், தட்பவெப்பச் சமநிலை முதலியவற்றால் வருவது. 'செல்வம்' நிலமும் வீடும், தட்டு முட்டுக்களும், பொன்னும் வெள்ளியும் மணியும், ஊர்தியும் கால்நடையும், பன்னாட்டு விளைபொருளும் செய்பொருளுமாகிய பொருட் செல்வமும்; கல்விச் செல்வமுமாம். 'விளைவு' மேற்கூறிய நானில விளையுள். 'இன்பம்' நாடக நடிப்பு, அழகிய இயற்கைக் காட்சி, திருவிழா, இசையரங்கு, சொற்பொழிவு, நால்வகை அறுசுவையுண்டி, நன்காற்று, இனிய இல்லற வாழ்வு, தட்பவெப்பச் சமநிலை; நிலவிளையாட்டு, நீர் விளையாட்டு, வேலை வாய்ப்பு, வரிப்பளுவின்மை, செங்கோலாட்சி முதலியவற்றால் நேர்வது. 'ஏமம்' செங்கோலாட்சி, படைவலிமை, அரண் சிறப்பு, பகையின்மை ஆகியவற்றால் ஏற்படுவது. இத்தகைய நாடு மண்ணுலகில் விண்ணுலகம் போன்ற தென்பது கருத்து.