கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண்.

 

கொளற்கு அரிதாய்-உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி- உள்ளிருப்பார்க்கு வேண்டிய பலவகை நுகர்ச்சிப் பொருள்களையும் உடையதாய்; அகத்தார் நிலைக்கு எளிது ஆம் நீரது-நொச்சிமறவனின் போர் நிலைக்கு எளிதான நிலைமையுடையதே; அரண்-சிறந்த கோட்டையரணாவது.

உழிஞையாராவார் உழிஞை மாலைசூடி நகரை முற்றுகையிடும் பகைவரான புறத்தார். நொச்சியாராவார் நொச்சிமாலைசூடி முற்றுகையிடப்பட்ட நகரைக் காக்கும் மறவரான அகத்தார். கொளற்கருமை, மரமடர்ந்த காவற்காட்டாலும் ஆழ்ந்து முதலைகள் பல கொண்ட அகழியாலும் அணுகுதற்கரிய மதிற்பொறிகளாலும் நேர்வதாம். கூழ் என்றது உணவும் நுகர்ச்சிப்பொருளும் செல்வமுமாகிய பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை. நிலைக்கெளிய நீர்மையாவது, நொச்சியார் விடுத்த படைக்கலங்கள் உழிஞையாரை எளிதாய்த் தாக்குமாறும் உழிஞையார் விடுத்தவை நொச்சியாரைத் தாக்கா வாறும், மதிலுயர்வும் மறைவிடங்களும் பதணப் பரப்பு முடைமை. பதணம் மதிலின் மேற்றளம் அல்லது மதிலுண்மேடை.