செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
மெஃகதனிற் கூரிய தில்.

 

பொருளைச் செய்க-வெற்றிபெறும் வினையை மேற்கொள்ள விரும்பும் அரசர் செல்வத்தை நிரம்ப ஈட்டுக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு அதனின் கூரியது இல்-அவர்தம் பகைவரின் வீறாப்பை அறுத்தொழிக்கும் படைக்கலம் அதனைப் போற் கூரியது வேறொன்றுமில்லை.

பொருள் பெறுகவே படையும் நட்பும் பெருகும். அதுகண்டு பகைவர் தாமே அடங்குவர். அல்லது பெரும்படை கொண்டு போரால் அடக்கப்படுவர் என்பது கருத்து. எஃகு உருக்கு. அது இங்கு உருக்கினாற் செய்யப்பட்ட படைக்கலத்தைக் குறித்ததனால் ஆகுபெயர், பொருள் வலிய பகையையும் அழிக்க வல்லதாதலால், அதனை வலிய பொருளையும் அறுக்கும் அரமாக அல்லது ஈர்வாளாக உருவகித்தார். பொருளைப்போற் பகையழிக்க வல்லது வேறொன்று மின்மையின், 'அதனிற் கூரியது இல்' என்றார். இது செருக்கை மரமாக அல்லது இரும்பாக உருவகியாமையால் ஒருமருங் குருவகம்.