பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 77. படைமாட்சி

அஃதாவது, அரசன் நல்வழியில் ஈட்டிய பொருளைக்கொண்டு அமைப்பதும், அவனாட்சிக்கும் பகைவரினின்று நாட்டைக் காத்தற்கும் இன்றியமையாததுமான படையின் சிறப்பு.

 

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை.

 

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை- தேர், யானை,குதிரை, காலாள் ஆகிய நால்வகை யுறுப்புக்களும் பொருந்திப் போரின்கண் புண்படுவதற்கும் சாதற்கும் அஞ்சாது பொருது பகைவரை வெல்லத் தக்க படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை-அரசனின் செல்வங்க ளெல்லாவற்றுள்ளுந் தலையாயதாம்.

இங்குப் படை யென்றது கரிபரிதேர்கால் என்னும் நான்கின் தொகுதியை, அது பஞிலம் எனப்படும். 'சூரனுக்குச் சேர்ந்த மரணஞ் சிறுதுரும்பு' ஆதலாலும், ஊறஞ்சியவிடத்து வெல்லுதல் கூடாமையாலும், 'ஊறஞ்சா' என்றும்; பகைவரை வெல்லுதற்கு மட்டுமன்றி ஆட்சி செய்தற்கும், நட்பு நீங்கலாக ஏனையர சுறுப்புக் 'களையெல்லாம் காத்தற்கும், இன்றியமையாததாகலின்' வெறுக்கையு ளெல்லாந் தலை, என்றும்; கூறினார். வகுப்பு, கை, அணி என்பன காலாட்படைப் பிரிவுகளின் பெயர்.

இனி 'உறுப்பமைந்து 'என்று பொதுப்படச் சொன்னதினால், படை என்றது மேற்கூறிய நால்வகை நிலப்படையையே யன்றிக் கலப்படையாகிய நீர்ப்படையையும் தழுவும், மூவேந்தர்க்கும் கடன் மேற் செல்லும் நாவாய்ப் படையும் தொன்றுதொட்டு இருந்து வந்தது. தலைக்கழகக் காலத்திற் கடற்படை செலுத்திச் சாலித் (java) தீவைக் கைப்பற்றி,"அடியின் தன்னள வரசர்க் குணர்த்திய" வடிம்பலம்பநின்ற பாண்டியன் வேறு; "வடிவே லெறிந்த" பாண்டியன்வேறு;" வான்பகை"யில்லாத" முந்நீர் விழவினெடியோன் ஆன பாண்டியனும் வேறு.

கடைக் கழகக் காலத்துக் கரிகால்வளவனை,

"நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக"


என்று வெண்ணிக் குயத்தியார் பாடியிருப்பதால் (புறம்.66), வளி தொழி லாண்ட சோழன் இடைக் கழகக் காலத்தவனாயிருந்திருக்கலாம். "வாத ராசனை வலிந்துபணி கொண்ட வவனும்" என்று கலிங்கத்துப்பரணி (இராச. 16) குறித்தது அவனையே.

"வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம்பறுத்து"

(அகம்.127),

"உடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய
வெல்புகழ்க் குட்டுவன் "

(பதிற்.46)

என்பன, கடைக் கழகக் காலத்தில் (கி.பி. 2 ஆம் நூற்.) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அவன் மகன் செங்குட்டுவனும் கலப்படை கொண்டிருந்தமையைக் காட்டும்.

கி. பி. 10-ஆம் நூற்றாண்டினனான முதலாம் அரசவரசன் (இராசராசன்) மெய்க்கீர்த்தி, "காந்தளுர்ச் சாலை கலமறுத்தருளி" என்று கூறுவதால், சோழனுக்கும் சேரனுக்கும் கலப்படையிருந்தமையை ஒருங்கே தெரிவிக்கும்.