ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.

 

எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என் ஆம்-எலியாகிய பகை பெருந்திரளாகக் கூடிக் கடல் போல் ஆரவாரித்தாலும் பாம்பிற்கு என்ன தீங்கு நேரும்!; நாகம் உயிர்ப்பக் கெடும்-அப்பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே அப்பகை ஒருங்கே அழிந்துபோம்.

மறங்குன்றிய பகைவர் பலர் திரண்டு முழக்கஞ் செய்தாலும் மறமிஞ்சியவன் அஞ்சான். அவன் கிளர்ந்தெழுந்த துணையானே அவர் கெட்டொழிவர் என்பது பட நின்றமையின் , இது பிறிது மொழி தலணியாம். தொல்படையுள்ளும் பெருமறவன் சிறந்தவன் என்பது கருத்து. உவரியொலித்தக்கால் உவமைத் தொகை. உவரி யொலித்தல் என்னும் வினையுவமத்தால் திரட்சி பெறப்பட்டது. பெருமறவனுக்குப் பெருஞ் சிறப்புச் செய்க என்பது குறிப்பு.