கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு
மாற்ற லதுவே படை.

 

கூற்று உடன்று மேல் வரினும்-இறப்புத் தெய்வமாகிய கூற்றுவனே சினந்து வந்து தாக்கினும்; கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே-கலையாது எதிர்த்து நின்று பொரும் வலிமையுடையதே; படை-சிறந்த படையாவது.

"எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான்
அப்போ தந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான் பொருளொடும் போகான்
சாற்றவும் போகான் தமரொடும் போகான்
நல்லா ரென்னான் நல்குர வறியான்
தீயா ரென்னான் செல்வரென் றுன்னான்
திரியா னொருகணந் தறுக ணாளன்."

(கபி. 81.35.41)

ஆதலின், உம்மை உழர்வு சிறப்பு. சாவின் ஆட்படுத்தமே (personification) கூற்றுவனாயினும், அத்தகைய சிறுதேவன் உண்டென்பதும், அவன் கடவுட்கு அடுத்தபடியாக மறம் நிறைந்தவன் என்பதும், பல பழ மதங்களின் பொதுக் கருத்தாம். ஆற்றல் உடல் வலியும் உளவலியும்.