தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து.

 

தலைவந்த போர் தாங்கு தன்மை அறிந்து-பகைவரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரை விலக்கும் வகையறிந்து, அதற்கேற்பத் தன்னை வகுத்துக்கொண்டு; தார்தாங்கிச் செல்வது-பகைவர் தூசிப்படையைத் தன்மேல் வராமல் தடுத்துத் தான் அதன்மேற் சென்று தாக்குவதே; தானை-சிறந்த படையாவது.

படை வகுப்பு இடத்திற்கேற்பத் தண்டம், மண்டலம், சக்கரம், சகடம் (தேர்), தாமரை முதலிய பல்வேறு வடிவில் அமைக்கப் பெறுவதாகும். படையுறுப்புக்கள் நெற்றி, தார் (தூசி), கை, பேரணி, கூழை என ஐந்தாம்.

"தூசியுங் கூழையு நெற்றியுங் கையும்
அணியு மென்ப தப்படைக் குறுப்பே."

(403)

"கூழை யென்பது பேரணி யாகும்."

(404)

"தாரே முன்செல் கொடிப்படை யாகும்."

(405)

என்பன பிங்கலம். நெற்றியென்பது தாரின் முற்பகுதியும், கை என்பது படைவகுப்பின் இருபக்கமும், கூழை யென்பது பேரணியின் பிற்பகுதியும், போலும்!

"படை வகுப்பாவது வியூகம்; அஃது எழுவகை யுறுப்பிற்றாய், வகையானான்காய், விரியான் முப்பதாம். உறுப்பேழாவன உரமுதற் கோடியீறாயின. வகை நான்காவன தண்டம், மண்டலம், அசங்கதம், போகமெனவிவை. விரிமுப்பதாவன தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரியாறும், போகவிரி ஐந்து மெனவிவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டுரைப்பிற் பெருகும். அவையெல்லாம் வடநூல்களுட் கண்டுகொள்க." என்று பரிமேலழகர், பண்டைத் தமிழ் மறநூல்கள் இறந்துபட்டபின், அவற்றின் விரிபுந் திரிபுமான வடநூன் முறையைத் தென்னாட்டிற் குரியதாகக் கூறியிருப்பது பெருந்தவறாம்.