ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.

 

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை-ஒருவனுடைய குணங்களையும் செயல்களையும் நல்லனவாவென்று பலமுறையும் பலவகையாலும் ஆராய்ந்து பாராது அவரொடு செய்துகொள்ளும் நட்பு; கடைமுறை-இறுதியில்; தான் சாம் துயரம் தரும்-தான் சாதற்கேதுவான துன்பத்தை யுண்டாக்கும்.

தீயவனோடு நட்புக்கொள்ளின், அவன் பட்ட கடனெல்லாம் தன் தலைமேற் சுமருதலானும், அவன் செய்த குற்றங்கட்குரிய தண்டனைகளைத் தானும் அடைதலானும், அவன் பகையெல்லாந் தன்னையுந் தாக்குதலானும், இறுதியிற் சாதல் அல்லது சாதற்கேற்ற நோதல்தான் விளையும் என்பதாம். 'ஆய்ந்தாய்ந்து' என்னும் அடுக்குப் பன்மை அல்லது தொடர்ச்சி பற்றியது.