பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 81. பழைமை

அஃதாவது, பழைமையான நட்பின் சிறப்புரிமை. அது நட்டாரின் பழமை பற்றி அவர் செய்யும் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளுதல். இடம் நோக்கிக் குறிப்பாற்றல் கொண்டு தலைப்புக்குறுகி நின்றது. குற்றமே யில்லா முற்றுந் தூயார் உலகிலொருவரும் இல்லாமையானும், பொறையுடைமையும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய அறமாதலானும், நீண்ட காலமாகப் பழகிய நண்பர் அப்பழக்கம் பற்றி ஏதேனும் பொறுக்கக்கூடிய தவறு செய்யின் அதை மகிழ்ச்சியுடன் பொறுத்துக்கொள்வதும் நண்பர் கடமையென்பதை அறிவித்தற்கு, இது நட்பாராய்தலின் பின் வைக்கப்பட்டது.

 

பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

 

பழைமை யெனப்படுவது யாது எனின்-பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு-அது பழைமையான நண்பர் தாம்விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் கெடுக்காத பொறைநட்பாம்.

உரிமையால் விரும்பியவாறு செய்வன: கீழ்வினைஞரா யிருந்து கருமஞ் செய்யுங்காற் கேளாது செய்தல், கேடாகச் செய்யினும் மனம் வருந்தாமை, தமக்கு வேண்டியவற்றைத் தாமே யெடுத்துக்கொள்ளுதல், பணிவும் அச்சமுமின்மை, வீட்டிற்குள் வந்து தாராளமாகப் பழகுதல் முதலியன. இத்தகைய வரம்பு கடந்த நடத்தையைப் பொறுத்துக் கொள்வதே பழமை என்றவாறு. "ஒருவர் பொறையிருவர் நட்பு." (நாலடி. 223) என்றதும் இது பற்றியே. 'பழைமை' ஆகுபெயர்.