ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்

 

'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' கேண்மை-ஆகும் செயலையும் ஆகாததாக்கிக் கெடுப்பவரின் நட்பை; சொல்லாடார் சோரவிடல்-அவருக்குச் சொல்லாமலே மெல்ல மெல்லத் தளரவிடுக.

இனி, 'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' என்பதற்கு, தம்மால் இயலுங் கருமத்தையும் இயலாததாகக்காட்டி நடிப்பவர் என்று உரைப்பினுமாம். சோரவிடலைத் தெரிவிப்பின் ஏதேனுஞ் சூழ்ச்சி செய்து அதைத் தடுப்பராதலின், 'சொல்லாடார்' என்றும், நீண்ட காலத்தின்பின் தாமே அறிந்துகொள்ளுமாறு மெல்ல மெல்லத் தளரவிடுக என்பார் 'சோரவிடல்' என்றும், கூறினார். 'சொல்லாடார்' எதிர்மறை முற்றெச்சம். எச்சவும்மை தொக்கது.