உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.

 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்- உயர்ந்தோ ரெல்லாரும் உண்டென்று சொல்லும் பொருளை இல்லையென்று மறுக்கும் புல்லறிவாளன் ; வையத்து அலகையா வைக்கப்படும்- மண்ணுலகத்தில் மாந்தன் வடிவில் வாழும் பேயாகக் கருதப்படுவான்.

உயர்ந்தோர் உண்டென்ப கடவுள், மறுபிறப்பு, இருவினைப் பயன், வீடு , தீயுழி (நரகம்) முதலியன.

"ஒன்றறி கிளவி தறட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்."


என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (சொல். கிளவி, 8) உண்டு என்பது ஒன்றன்பாற் சொல்லாதலால், 'உண்டென்பது' வகுப்பொருமை. "வேறில்லை யுண்டைம் பால்மூ விடத்தன." என்னும் 13-ஆம் நூற்றாட்டை நன்னூல் நூற்பா(339) பிற்காலத்ததாம். தேவிகம் (சாத்துவிகம்), மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் முவகை மாந்தத் தன்மையுள் முதலிரண்டும் இல்லாதவனை 'அலகை' என்றார்.