பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 86. இகல்

அஃதாவது, இருவர் ஒரு பொருள் பற்றி அல்லது அன்பின்மை கரணியமாகத் தம்முட் பொருது அல்லது போராடித் தோற்றற்கும் அழிதற்கும் ஏதுவான மாறுபாடு. பேதைமையும் புல்லறிவாண்மையும் ஆகிய தற்பகைக் குணங்களின் பின் மற்பகைக் குணத்தைக் கூறூகின்றாராதலின், இது புல்லறிவாண்மையின்பின் வைக்கப்பட்டது. மன்-மற்ற. மற்பகை பிறரைப் பகைத்தல்: "தன்னுயிர் போல் மன்னுயிரையும் நினைக்க வேண்டும்" என்னும் பழமொழியை நோக்குக.

மக்களெல்லாரும் ஒற்றுமையாய் அன்புற்றும் இன்புற்றும் வாழவேண்டுமென்பது ஆசிரியர் நோக்கமாதலின், அதற்குத் தடையாயுள்ள பகைமைக் குணத்தை இங்கு இகல் என்றது தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் பொதுவான மாறுபாட்டுக் குணத்தை என அறிக. ஒருவன் இன்புற்று வாழ்தற்கு இன்றியமையாத பொருளை அமைதியாய் ஈட்டுதற்கு இகல் தடையாயிருத்தலின்; இது இப்பொருட்பாலில் விலக்கப்பட்டது.

 

இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

 

இகல்-மாறுபாடு; எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய்- இயங்குதிணைப்பட்ட எல்லாவுயிர்கட்கும் இனத்தொடு கூடி வாழாமைக்கு ஏதுவான, பிரிவினை யென்னும் தீய குணத்தை வளர்க்கும் மனநோய்; என்ப- என்று கூறுவர் அறநூலார்.

சேக்கையும் உணவும் இணைவிழைச்சும் பற்றி அஃறிணையுயிரினங்கட்குள்ளும் இகல் விளைதலின், 'எல்லாவுயிர்க்கும்' என்றும், ஒன்றுபட்டிருக்க வேண்டிய இனத்தைப் பல்வேறு பிரிவாகப் பகுத்தலால் 'பகல்' என்றும், கூறினார். சேக்கை தங்குமிடம். இகலென்னுந் தீக்குணமுடைய மாந்தர் உயர்திணையாகாது அஃறிணைப்பாற்படுவர் என்பது தோன்றப் 'பண்பின்மை பாரிக்கு நோய்' என்றார்.