இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்.

 

இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்- மாறுபாடு என்று சொல்லப்படும் துன்பந்தரு நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குவானாயின்; தவல் இல்லாத் தா இல் விளக்கம் தரும்- அது அவனுக்கு அழியாத குற்றமற்ற புகழைத் தரும்.

உலகுள்ள அளவும் நிலைத்து நிற்றலால் 'தவலில்லா' என்றும், எல்லாராலும் புகழப்படுவதாலும் பெயரை விளங்கச் செய்வதாலும் 'தாவில் விளக்கம்' என்றும், கூறினார்.