ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார்ப் பகைகொள் பவன்.

 

தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன்-தான் துணையின்றித் தனியனா யிருந்துகொண்டே பலரொடு பகைகொள்பவன்; ஏமுற்றவரினும் ஏழை-பித்தம் பிடித்தவரினும் பேதையானவன்.

தனிமை நட்பின்மை, அறிவின் திரிவால் இருவரும் ஒப்பாராயினும், பித்தன் பொதுவாக ஒருவரையும் பகையாமையாலும் அதனால் அவனுக்குப்பிறராற் கேடின்மையானும், துணையோடு கூடிய வழியும் பகைவரை வெல்லுதல் உறுதியில்லாதிருக்க, அஃதில்லாதவன் ஒரே சமையத்திற் பலரொடு பொரின் தான் உடனே அழிதல் முழுவுறுதியென்பதை அறியாமையானும், பலர்பகை கொண்ட தனியனை ’ஏமுற்றவரினும் ஏழை’ என்றார். இவ்விரு குறளாலும் பகைகொள்ளுதல் சிறப்பு வகையால் விலக்கப்பட்டது.