உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

 

செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார்- தம்மைப் பகைப்பவரின் செருக்கை அடக்கும் நிலைமை யிருந்தும் இகழ்ச்சியால் அதைச் செய்யாது விட்டுவிட்டவர்; மன்ற உயிர்ப்ப உளர் அல்லர்- பின்பு, உறுதியாக மூச்சுவிடும் அளவிற்கும் உயிர் வாழ்பவராகார்.

முன்பு மெலியராயிருந்த பகைவர் பின்பு வலியராகித் தம்மை வேரொடு களைதல் திண்ணமாதலின், 'உயிர்ப்பவுளரல்லர் மன்ற' என்றார் 'எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும்' என்பதுபோல், அவர் உயிர்த்த அளவிலேயே இறந்து விடுவர் என்று உரைப்பினும் அமையும். 'மன்ற' என்னுஞ் சொற்கு முன்பு உரைத்தது போல் உரைக்க. இக்குறளால் பகையை முளையிற்களையாவழி நேருங்கேடு கூறப்பட்டது. முந்தின குறளும் இதுவும் பகை முதிர்ச்சியே பற்றிக் கூறினும், அது 'கைகொல்லும்' முதிர்ச்சியும் இது மெய்கொல்லும் முதிர்ச்சியும் பற்றியன என வேறுபாடறிக.