பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்

அஃதாவது,காமவின்பக் கழிபேராசைபற்றி,தனக்கு அடங்கி நடக்க வேண்டிய தன் மனைவிக்குத் தான் அடங்கி நடத்தல். இதனாற் கடமை தவறுதலும் அறஞ்செய்யாமையும் வீண் செலவுந் தீவினையுஞ் செய்தலும் நேர்தலால்,இது பகையோடொத்ததாகவும் பெரியாரைப் பிழைத்தலின்பின் வைக்கப்பட்டது.சேறல் செல்லுதல்.அஃது இங்கு நடத்தலைக் குறித்தது.

"ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே." என்னும் பழமொழிக்கேற்ப, பெண்டிருள் நல்லமைச்சர் போன்றவரும் தீயமைச்சர் போன்றவரு மிருப்பினும், ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியால், இங்குப் பெண் என்றது தீயமைச்சர் போன்ற பெண்டிரையே என அறிந்துகொள்க.

 

மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழாவார்
வேண்டாப் பொருளு மது.

 

மனை விழைவார் மாண்பயன் எய்தார்- இன்பம் பற்றி மனைவியை அளவறிந்து காதலித்து அவள் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செய்யார்; வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது-இனி இன்பத்திற்கும் அறத்திற்குமேதுவான பொருளீட்டுதலை விரும்பி மேற்கொள்வார்,அதற்குத் தடையென்று கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் அப்பெண்ணின்பப் பித்தமே.

'மனை' ஆகுபெயர்.' விழைதல்' ஆகுபெயர் போன்ற ஆகுவினை.'பயன்' என்றது அறப்பயனை இம்மைக்கேயுரிய பெண்ணின்பத்திலும் மும்மைக்கு முரிய அறப்பயன் சிறந்ததாதலின்,அதனை 'மாண்பயன்' என்றார். வினை யென்பது பாலாற் பொருளீட்டும் வினையைக் குறித்தது.முப்பொருள்களுள் ஏனையிரண்டும் பெறுதற்குக் கருவியாயிருக்கும் பொருட் பொருளை யீட்டுதற்குத் தடையாயிருத்தலின், மனைவி விருப்பப்படியொழுகுதல் கூடாதென்பதாம். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.