ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

 

மாய மகளிர் முயக்கு-அழகு , ஒப்பனை, நளினம், தளுக்கு, ஆடல், பாடல் முதலியவற்றால் ஆடவரை, சிறப்பாக இளைஞரை மயக்கி வஞ்சிக்கும் விலை மகளிரின் தழுவலை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப- அவ்வஞ்சனையை ஆராய்ந்தறியும் அறிவில்லார்க்குக் காமினிப் பேய் தாக்கு என்பர் அறிஞர்.

அணங்கென்றது அணங்குதாக்கை.அணங்கு காமவழியால் ஆடவர் உயிரைக் கவரும் அழகிய பெண்பேய். தாக்குத் தழுவல்.முன் இன்பஞ் செய்வதுபோல் தோன்றிப் பின் வறுமையாலும் நோயாலும் வாழ்நாளைக் குறுக்கும் விலைமகளிர் முயக்கத்திற்கு ,முன் இன்பமாகத் தோன்றிப் பின் உயிர் கவரும் காமினிப் பேயின் தழுவலை உவமங் கூறினார்.அணங்குதல் வருந்துதல் அணங்கும் பெண்பேயை அணங்கென்றது முதனிலைத் தொழிலாகு பெயர்.'அணங்கு' இங்கு அணங்குதாக்கைக் குறித்தலால் ஆகுபொருளி.'அணங்கென்ப' என்பது அணங்குதாக்குப் போல்வதென்பார் என்றே பொருள்படுதலால், உவமையாவதன்றி உருவகமாகாது.இதை "மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்" என்பதுபோற் கொள்க.